காக்கைக் குருவி எங்கள் சாதி என்றார் பாரதி. இன்று காக்கைகளை காண முடிகிறது, ஆனால் குருவிகளைக் காண முடிகிறதா...என்பது கேள்விக்குறி தான். மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் சிட்டுக்குருவிகளை நாம் காண்பது என்பது அரிதான ஒன்றாய் மாறிவிட்டது. பெயருக்கு ஏற்றாற்போல் சிறிய உடலமைப்புடன் காணப்படும், இந்த சிட்டுக்குருவிகள் நெல் வயல்களில் வசிக்கும் பூச்சிகளை உண்டு விவசாயத்துக்கு நன்மை அளித்து வந்தது.
சிட்டுக்குருவிகள் வளர்க்க இலவசமாகத் தரப்படும் கூடுகள்!
முன்பு நகரம், கிராமம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் காணப்பட்ட இந்த சிட்டுக்குருவி, தற்போது நகரங்களில் காணப்படுவது அரிதாகிவிட்டது. இதற்குக் காரணம் வளர்ந்து வரும் அதீத அலைபேசிகளின் கதிர்வீச்சு, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் மயமாக்கப்பட்ட பெரிய பெரிய கட்டடங்கள், மாசுபாடு என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
'விழுதுகள் இயக்கம்' மூலம் சிட்டுக்குருவிக்கு வாழ்வளிக்கும் சரவணன்
சிட்டுக்குருவி இனம் அழிந்துவரும் நிலை ஏற்பட்டாலும், அதனைக் காக்க பல தன்னார்வலர்கள் இன்றும் முயற்சி செய்துகொண்டேதான் இருக்கின்றார்கள். அந்த வகையில் நாகை மாவட்டம், சீர்காழியில் பல ஆண்டுகளாக 'விழுதுகள்' என்னும் இயக்கம், தமிழகம் முழுவதும் சிட்டுக்குருவியைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக, பலரது உதவியுடன் சிட்டுக்குருவிகளுக்கான சின்னஞ்சிறு கூடுகளை மரத்தால் செய்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலவசமாக வழங்கி சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக மக்கள் வசிக்கும் இடங்களில்தான் வாழ விரும்புகின்றன, இந்த சிட்டுக்குருவிகள். உதாரணமாக வீட்டு மாடங்கள், கதவின் முன்புறம் எனச் சிறிய இடங்களில் கூடுகட்டி வாழ்ந்து வந்த இந்தச் சின்ன பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளால் நகரத்தை விட்டு விடைபெறத் தொடங்கிவிட்டன. நகரத்தில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்றால், கிராமப்புறங்களில் அதன் எண்ணிக்கை தலைகீழாக அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. நகரங்களில் வாழ்வதற்குத் தகுந்த போதுமான சூழல் அமையாமல் போவதால் அவற்றுக்குத் தகுந்த வாழ்க்கைச்சூழல் அமையும் கிராமங்களைத் தேடிச்செல்கின்றன, இந்த சிட்டுக்குருவிகள். அந்த மாற்றங்களைத் தாக்குப்பிடித்து இடம்பெயரும் திறன் அனைத்து சிட்டுக்குருவிகளுக்கும் வாய்ப்பதில்லை.
சிட்டுக்குருவி கூடுகள் (வீடுகள்)
அந்த இடப்பெயர்வில் சில குருவிகள் மரித்துப் போகவும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது விழுதுகள் இயக்கம் சார்பில் வழங்கப்படும் சிட்டுக்குருவி கூண்டானது, நகர்ப்புறங்களில் உள்ள பல்வேறு கட்டடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிட்டுக்குருவி இனங்கள் தங்கள் வாழ்வை அழிவில்லாமல் தொடர வாய்ப்பு உள்ளதாக பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.