மயிலாடுதுறை: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் கோயில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்து உள்ளது. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது.
இக்கோயில் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்றும், சோழ மன்னன் திருப்பணிகள் செய்து வழிபட்டதால் சோழீஸ்வரர் என்றும் பெயர் பெற்றது. மேலும் இக்கோயில் அக்னி பகவானின் பாவங்களை போக்கிய தலம் மற்றும் தொடர்ந்து சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் வழிபட்ட தலமுமாகும்.
மேலும் ஆஞ்சநேயர் தாமரைப்பூ கொண்டு வழிபாடு நடத்திய இந்த தலத்தில் தான், சோழீஸ்வரர் சுவாமியை திருமண கோலத்தில் தரிசித்து தன் பாவங்களை போக்கிக் கொண்டார் அக்னி பகவான். மேலும் இத்தலத்தில் பரத முனிவர் பிள்ளை பேரு வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தை செய்தார். அந்த வேள்வியில் தோன்றியவர் தான் பரிமள சுகந்தநாயகி. அவரும் இத்தலத்தில் தான் இறைவனை அடைய தவம் மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, இத்தலத்து பரிமள சுகந்த நாயகியை வழிபட திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் எனவும் சனி பகவான் சுயம்பு மூர்த்தியாக பாதாளத்தில் இருந்து தோன்றி வழிபட்டதால், இத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவானை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் போன்ற பல்வேறு சிறப்புகளை இக்கோயில் கொண்டுள்ளது.