மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் வாசுகி நாகம் வழிபாடு செய்த சௌந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நவ கிரக ஸ்தலங்களில் கேது ஸ்தலமான இங்கு, கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. பலவர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவகிரகங்களில் ஞானத்தை அளிப்பவராவார்.
இந்த இடம், அமுதம் வேண்டி பாற்கடலை கடைவதற்கு கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகம், உயிர் பிழைத்து இறைவனை வேண்டி தவம் செய்த இடம் என்று தலபுராணம் தெரிவிக்கின்றது. மூங்கில் காடாக இருந்த இந்த இடத்தில் நாகநாதசுவாமியை வாசுகி நாகம் வழிபாடு செய்த காரணத்தால், இந்தியாவில் கேது பகவானுக்கு என்று இருக்கும் ஒரே கோயிலாக இது விளங்குகின்றது.
இவர் மனக்கோளாறு, தோல் வியாதிகள், புத்திரதோஷம், சர்ப்பதோஷங்களை அளிக்கவல்லவர். கேது பகவானுக்கு கொள்ளு தானியத்தை கீழே பரப்பி, அதில் தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோயிலுக்கு மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து, தங்களது தோசங்களை நீக்க பரிகாரம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இன்று (அக்.08) மதியம் 3:41 நிமிடங்களுக்கு, துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேது பெயர்ச்சி அடைகிறார். கேது பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 6-ஆம் தேதி துவங்கி, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.