நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இதன் 26ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று உடல்நலக்குறைவால் முக்தி அடைந்தார். அவரது திருமேனி ஆதீன மடத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவபிரகாசம், ரத்தினகிரி ஆதீனம் பாலமுருகன் அடியார் சுவாமிகள் ஆகியோர் தருமபுரம் ஆதீன திருமேனிக்கு நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் சுவாமிகள் கூறுகையில், 'தருமை ஆதீனம் 26ஆவது குரு மகாசந்நிதானம் நேற்று பரிபூரணம் அடைந்தார். அவர் நன்றாக இருந்தபோதே ஆதீன இளைய சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சுவாமிகளுக்கு பட்டம் சூட்டியுள்ளார். 26ஆவது குரு மகா சந்நிதானம் சைவ சமயத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. சைவ சமய மரபுகளை உலகிற்கு எடுத்துக் கூறியவர்.
மேலும், தருமை ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சந்நிதானமாக பட்டம் ஏற்க உள்ள ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த சுவாமிகள், மதுரை ஆதீனத்தில் ஐந்தரை ஆண்டு காலங்கள் செயலாளராகவும் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சிங்கப்பூர், மலேசியா போன்ற பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்களை நன்கு அறிந்தவர் இவர். மிகவும் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்.