மண்ணில் பிறக்காத பேரக் குழந்தைகளுக்கு மாடிக்கு மேல் மாடிகட்டி, சொத்துக்கு மேல் சொத்து சேர்க்கும் பெரும் முதலாளிகள் இருக்கும் உலகில்தான், அன்றாட உணவிற்கே அல்லல்படும் தினக் கூலிகளும் வாழ்ந்துவருகின்றனர். பசியால் கோடிக்கணக்கில் மக்கள் செத்து மடிந்தாலும், இந்த முதலாளிகள் அளிக்கும் நிதி ஒரு லட்சமாகத்தான் இருக்கும்.
அதிகாரமும், பணமும் உடையவர்கள்தான் வாழ முடியுமா? நாங்கள் வாழவே முடியாதா என ஆதங்கப்படுகின்றனர், ஊரடங்கில் தவிக்கும் விளிம்புநிலை மக்கள்.
தினக்கூலிகளின் வாழ்க்கையே அன்றாட வேலையை நம்பியதுதான். இன்று உழைப்பது நாளை, அவர்கள் வீட்டுப் பானையில் சோறாக வேகும். தொடர்ந்து நான்கு நாள்கள் வேலைக்குச் செல்லவில்லையென்றாலே, ஐந்தாம் நாள் சொல்லவே வேண்டாம், பட்டினிதான். அப்படியான சூழலில்தான், நாகப்பட்டினம், திருமருகல் ஒன்றியம் சேவாபாரதி சன்னமங்களம் குடியிருப்பில் 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவித்துவருகின்றனர்.
கஞ்சியாவது காய்ச்சிக் குடிக்கலாம் என்றால், நியாயவிலைக் கடைகளில் கொடுக்கும் அரிசியில் தரம் சுத்தமாகயில்லை. அங்கு, வழங்கப்படும் அரிசி முழுக்க பூச்சி, கல் என குப்பைகளின் சேகரமாக விளங்குகிறது. நல்ல அரிசியை வாங்கி சாப்பிடக்கூடவா எங்களுக்கு அருகதையில்லை, என அப்பகுதியினர் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சேவாபாரதியைச் சேர்ந்த ராதா, “குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் வாங்கக்கூட காசில்லாமல், வறுமையிலிருக்கிறோம். எங்களுக்கு அரசு ஏதாவது உதவிசெய்யும் என நம்பினால், பூச்சி, புழு, கல் போன்றவை கலந்த அரிசியை வழங்குகிறது. 25 கிலோ அரிசி மட்டும் வழங்கினால் மட்டும் போதுமா, தரமாயிருக்க வேண்டாமா?
சிலருக்கு மட்டும்தான் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ளவர்களுக்கு எவ்வித பதிலும் இல்லை. அனைவருமே கூலி வேலைதான் பார்க்கிறோம். மாதக்கணக்கில் வீட்டிலிருந்தால் எப்படி வாழ முடியும். அரசும், தொண்டு நிறுவனங்களும் உதவினால், பிழைப்போம். இல்லையெனில், பசியோடு தற்கொலைதான் செய்துகொள்வோம்” என மனம் நொந்து குமுறுகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த மார்டீன் பேசுகையில், “எங்கள் பகுதிக்கு இன்னும் எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. ஊரடங்கினால் வேலையிழந்து ஒருவேளை உணவிற்கே சிரமப்பட்டுவருகிறோம். அரிசியில் கிடக்கும் பூச்சிகளைப் பொருட்படுத்தாமல், கஞ்சி காய்த்து குடிக்கலாமென்றால், ஊறுகாய்க்குக்கூட வழியில்லை.
தரமில்லாத அரிசியைக் காட்டும் சன்னமங்களம் பகுதியினர் இத்தனை வருட கூலி வேலையில், ஒன்றும் சேமிக்க முடியவில்லை. சுனாமியினால் பாதித்த காரணத்திற்காக, அரசு வீடு வழங்கியது. ஒருவேளை இந்த வீடு கிடைக்கவில்லையென்றால், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவித்திருப்போம். அரசு இனிமேலாவது எங்கள் கதறல்களைக் கேட்டு உதவ வேண்டும்” என்றார்.
நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடி, சமத்துவபுரம், வாஞ்சூர், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களின் குடும்பத்தினரும் இதே நிலையில்தான், நாள்களைக் கடத்திவருகின்றனர்.
தரமில்லாத அரிசியுடன் செய்வதறியாது திகைத்த தினக் கூலிகள் அன்றாடக் கூலிகளுக்குத் தரமில்லாத அரிசி வழங்கும், அறமில்லாத செயல், இனியும் நீடிக்கக் கூடாது. அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லையெனில், கரோனாவின் பட்டியலில், பசியால் மடிவோரின் பெயர்களையும் குறிப்பிட வேண்டிய சூழல் உருவாகும்.
இதையும் படிங்க: முகாமில் ஏற்பட்ட மனமாற்றம்... வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர ஆதரவற்றோர் கோரிக்கை!