நாகப்பட்டினம்: கரோனா பொது முடக்க காலத்தில் பல தொழில்கள் முடங்கிய நிலையில், முகக்கவசங்கள் தயாரிக்கும் தொழில் மட்டும் சிறப்பாக நடைபெற்று வந்தது. முகக்கவசங்களுக்கான தேவை கூடுதலாக இருந்ததாலும், இந்தியாவில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாலும், பல முகக்கவசங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த கரோனா காலகட்டத்தில் உருவாகின.
அதுபோல, மயிலாடுதுறையில் உருவான நிறுவனம்தான் ஏஜிஎன் சொல்யூஷன்ஸ். நடவு இயந்திர விற்பனையில் ஈடுபட்டுவந்த இந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ், கரோனா உச்சத்தில் இருந்தபோது வெளிநாட்டில் வசிக்கும் தனது நண்பருக்கு அனுப்புவதற்காக என்- 95 ரக முகக்கவசம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதும் முகக்கவசங்களுக்கு நாடுமுழுவதும் தட்டுப்பாடு நிலவியதும் இவருக்கு தெரியவர குறைந்த விலையிலும், தரமாகவும் முகக்கவசங்களை தயாரித்து விற்கவேண்டும் என்ற சிந்தனை அவருக்கு உதித்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஏஜிஎன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் என்- 95 ரக பாதுகாப்பு முகக்கவசத்தை தயாரித்து விற்பனை செய்துவருகிறார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ். முதலில், முகக்கவசங்கள் தயாரிப்பது குறித்து எவ்வித அனுபவமும் இல்லாமல் இருந்த இவர், சமூக வலைதலப் பக்கங்களை ஆராய்ந்து முகக்கவசத் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு முகக்கவசம் தயாரிப்பினை தொடங்கியுள்ளார்.