மயிலாடுதுறை:குத்தாலம் தாலுகா மூவலூர் மகாதானபுரம் கூட்டுறவு நகர் பகுதியைச் சேர்ந்தவர், முருகேசன். இவரது 19 வயது மகள் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் தீபன் (25). இவர் ரயிலடி பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
அப்போது, அந்த இளம்பெண், தீபன் கடைக்குச் செல்போன் ரீசார்ஜ் செய்யச் செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கம் காதலாக மாறியது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இதனால், கடந்த 24ஆம் தேதி இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் கடலூர் மாவட்டம் சென்று அங்கே பதிவு திருமணம் செய்துகொண்டனர். மகளைக் காணவில்லை என பெண்ணின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாற்று சமூகத்தைச் சேர்ந்தவருடன் இளம்பெண் சென்றதால் ஆத்திரமடைந்த பெற்றோர் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குத்தாலம் காவல் துறையினர் தீபன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.