தமிழர்களின் பழங்கால பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தைக் கற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது. தற்போது ஒரு சில கிராமப்புறப் பகுதிகளில் திருவிழா காலங்களில் மட்டுமே அத்திபூத்தது போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலம்பாட்டத்தைக் காணமுடிகிறது.
இந்த நிலையில், நாகை அடுத்த செல்லூர் கிராமத்தில் கரோனா ஊரடங்கு விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுத்தந்து அவர்களின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றுகிறார் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநராகப் பணிபுரியும் பிரபாகரன். இதன் மூலம் அழிந்துவரும் சிலம்பக் கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுச்சேர்க்க தன்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை பிரபாகரன் மேற்கொள்கிறார்.
சிலம்பம் கற்றுத்தரும் பிரபாகரன் செல்லூர் கிராமத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாள்தோறும் காலை, மாலை என இரண்டு வேளையும், ஒரு மணி நேரம் ஒதுக்கி சிலம்பாட்டத்தை இவர் கற்றுத்தருகிறார்.
இலவசமாக பயிற்சி அளித்தால் சிறுவர்களிடம் ஆர்வம் இருக்காது என்பதற்காக சிலம்பம் கற்றுக்கொள்வதற்குத் தேவையான பிரம்புக் கம்பு வாங்குவதற்காக மட்டும் ஒவ்வொருவரிடமும் தலா 100 ரூபாய் கட்டணம் பெறுகிறார். தங்களின் உடல் ஆரோக்கியம், மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த முடியும் என்ற காரணத்தால் மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் சிலம்பத்தைக் கற்றுவருகின்றனர்.
சிலம்பம் கற்கும் மாணவர்கள் இது குறித்து சிலம்பம் கற்கும் 12ஆம் வகுப்பு மாணவி சீலா கூறுகையில், ”வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற காரணத்திற்காக தற்காப்புக் கலையான சிலம்பத்தைக் கற்றுக்கொள்கிறோம்” எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய 11ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி காயத்ரி பேசுகையில், “அதிகாலையிலேயே எழுந்து பயிற்சியில் ஈடுபடுவதால் உடல், மனம் புத்துணர்ச்சியாக உள்ளது. இதனால் படிப்பில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறமுடியும். யாரேனும் எங்களைத் தாக்கவந்தால் அவர்களைத் தடுத்து தற்காத்துக்கொள்ள முடியும்” என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
சிலம்பம் சுற்றும் 2கே கிட்ஸ் பயிற்சியாளர் பிரபாகரன் கூறுகையில், ”நான் எனது தாத்தாவிடம் கற்றுக்கொண்ட சிலம்பத்தைக் கற்றுத்தருகிறேன். இதற்காக கட்டணம் எதுவும் பெறுவதில்லை. தற்போது மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வருகின்றனர். இந்தக் கலை அழியாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கூடங்களில் உடற்கல்வி பாடத்தில் சிலம்பத்தையும் இணைக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
ஊரடங்கு விடுமுறையில் வீடியோ கேம்ஸ் விளையாடுவது, டிவி பார்ப்பது என்று நேரத்தை செலவழிக்காமல், தமிழர்களின் கலையை கற்றுவரும் செல்லூர் கிராமத்து 2கே கிட்ஸ்களின் செயல் கொண்டாடப்பட வேண்டியதே!
இதையும் படிங்க:அழிந்துவரும் பொம்மலாட்டக்கலை...!