புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்படும் சாராயம் நாகையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அரசு சேமிப்புக் கிடங்கில் சாராயம்: போலீசார் பறிமுதல்! - போலீஸ்
நாகை: அரசு சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி சாராயத்தை காவல் துறையினர் அதிரடியாக கைப்பற்றினர்.
இதையடுத்து வெளிப்பாளையம் காவல் துறையினர் நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த நல்லியான் தோட்டத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி தங்கபாண்டி சாராய பாட்டில் மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். அவரைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், அவரிடமிருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தங்கபாண்டி மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், சாராய கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கில் சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்புக் கிடங்கு அலுவலர்கள் மீது அரசு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.