நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரிய நாட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் முன்னாள் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவராகவும், தற்போதைய கீழையூர் ஒன்றிய திமுக செயலாளராகவும் உள்ளார். இவர் மீது, கடந்த செப்டம்பர் மாதம் அதிமுவின் நகரச் செயலாளர் வழக்கறிஞர் தங்க. கதிரவன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 2 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்து உள்ளதாக நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் செய்தார்.
அதனைத் தொடர்ந்து தாமஸ் ஆல்வா எடிசன் உள்பட ஆறு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாமஸ் ஆல்வா எடிசனை கைதுசெய்தனர். இந்த நிலையில், வடக்கு பொய்கை நல்லூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவர் கடந்த 11ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், தங்கள் தந்தை ராஜமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான 39 1/2 சென்ட் நிலத்தை, தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தை ஆரோக்கியராஜ் என்பவர் அவரது மகன் மரிய நிக்சன் என்பவருக்கு போலி ஆவணம் மூலமாக செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளதாகவும், கடந்த மாதம் 10ஆம் தேதி குடும்பத்தினருடன் தங்களுக்குச் சொந்தமான இடத்தை பார்க்கச் சென்றபோது, தாமஸ் ஆல்வா எடிசன் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும் கூறினார்.