நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்துவித சிகிச்சைகளும் கால்நடைகளுக்கு செய்யும் விதமாக கட்டிடங்கள்,மருத்துவமனை மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அறுவை சிகிச்சை, சினையூட்டுதல், கால்நடைகளை தங்க வைத்து சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள், உதவியாளர்கள், என பத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.
இந்த மருத்துவமனை மயிலாடுதுறையில் வசிக்கும் நகர்புற, கிராமப்புற மக்கள் தங்களது ஆடு, மாடு, கோழி, வளர்ப்பு நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரே அரசு கால்நடை மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், பத்து பேர் பணியாற்றி வந்த நிலை மாறி தற்பொழுது முதுநிலை மேற்பார்வையாளர் ஒருவர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்.உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் பிரதம மருத்துவரே மருத்துவமும் பார்க்கவேண்டும் என்ற நிலை உள்ளது.
கால்நடைகளை வைத்தியத்திற்கு கொண்டு வரும் பொதுமக்கள் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதம மருத்துவர், மூன்று கால்நடை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் ஆகிய காலி பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் நோய்வாய்ப்பட்டால், தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.
மருத்துவர்கள் பற்றாக்குறை அரசு கால்நடை மருத்துவமனையை நாடினால் அங்கே சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவரும் இல்லை, தேவையான மருந்துகளும் இல்லை, தினந்தோறும் செல்லப்பிராணிகள் நோயால் இறக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொண்டு பழைய மருத்துவமனை போல் திகழ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.