எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நாகப்பட்டினம்:திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. முருகனின் ஆதிபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலின் சித்ரா பௌர்ணமி விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இவ்வாலயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா கடந்த 23ஆம் தேதி கணபதி ஹோமம் முதல் யாக சாலை பூஜை வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து குடமுழுக்கு தினமான இன்று இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, நடைபெற்றது. லெட்சுமி ஹோமம், ரக்ஷபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியர்களின் கடம் புறப்பாடு நடைபெற்றது.
கருட பகவான் கோயிலை வலம் வர ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி மற்றும் இடும்பன், கடம்பன், பிடாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன் உள்பட கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருக்குவளை, கீழையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
இதையும் படிங்க:வீடியோ: தமிழில் மந்திரங்கள் முழங்க பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்