மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பார்கள். பார்வதி தேவி தான் கொண்ட சாபம் நீங்க மயில் உருவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டு, பாவ விமோசனம் பெற்ற தலம் என்பதால், இவ்வூர் மாயூரம், மாயவரம் என்றழைக்கப்பட்டு, தற்போது மயிலாடுதுறை என வழங்கப்பட்டு வருகிறது. இத்தலம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பெருமைக்குரியது.
இக்கோயிலில் நடைபெறும் மிகப்பெரிய உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் துலா உற்சவம் ஆகும். குறிப்பாக கடைசி 10 நாட்கள் தினசரி பஞ்சமூர்த்திகள் காவிரியின் தென்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவதுடன், 5ஆம் நாள் மயிலம்மன் பூஜை, 6ஆம் நாள் திருக்கல்யாணம், 9-ஆம் நாள் திருத்தேர் ஆகிய உற்சவங்கள் நடைபெற்று, 10ஆம் நாள் (அதாவது ஐப்பசி 30ஆம் தேதி) காவிரி துலாக் கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி நடைபெறும்.
இது தவிர, வைகாசி விசாக திருவிழா சிறப்புக்குரிய உற்சவம் ஆகும். இத்திருவிழாவில், கோயிலின் பிரம்மதீர்த்தத்தில் சுவாமி, அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் அபயாம்பிகை சந்நிதியின் இருபுறங்களிலும் நல்லத்துக்குடி கிருஷ்ண ஐயர் இயற்றிய ''அபயாம்பிகை சதகம்" என்ற 100 பாடல்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, அம்மனின் பெருமையைப் பறைசாற்றுகிறது.
சுவாமி சந்நிதியின் வெளிப்புறத்தில் உள்ள களஞ்சிய விநாயகர் அருகில் நாதசர்மா என்ற சிவபக்தர் ஐக்கியமாகியுள்ளார். இவரது மனைவி அனவித்யை சிவபெருமானை அனுதினமும் பூஜித்து, அம்பாள் கர்ப்பகிரகத்தின் பின்புறம் உள்ள சிவலிங்கத்தோடு ஐக்கியமானதால், இந்த சிவன் நாதசர்மா அனவித் யாம்பகை என்று அழைக்கப்படுகிறார். மேலும், இந்த சிவனுக்கு எந்த கோயிலிலும் இல்லாத முறையில் சிவலிங்க மேனிக்கு தினமும் புடவை மட்டுமே சாத்தப்படுகிறது.
திருக்கோயிலின் கிழக்குப்புறத்தில் 160 அடி உயரத்தில் 9 நிலை கொண்ட ராஜகோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் கலை நயத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இக்கோயிலில் கடைசியாக திருவாவடுதுறை ஆதீனம் 23ஆவது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் 2005ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.