ஸ்ரீ காளிங்க நர்த்தன ஆலயம் மயிலாடுதுறை: ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் ஆலயத்தில் 102 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று (செப். 6) வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், குழந்தைகள் வண்ண வண்ண உடைகளில் ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணர் பிறந்த இந்நாளில் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமும் அணிவித்து அவர்களின் கால் பாதத்தை வீட்டிற்குள் வைத்து கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். மேலும், நாட்டில் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு கிருஷ்ணருக்கு உகந்த உணவுகளும் படையலிட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவானது கிருஷ்ணர் ஆலயங்கள், பஜனைமடங்கள், வீடுகளில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவித்து, கிருஷ்ணருக்கு பிடித்த சீடை, முறுக்கு, வெண்ணை, பழவகைகள் வைத்து படையலிட்டு குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அருகில் உள்ள கிருஷ்ணர் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க:ஓசியில் போண்டா தராததால் ஆத்திரம்! மூதாட்டியின் மீது சிலிண்டரை தூக்கி வீசிய போதை ஆசாமிகள்!
மயிலாடுதுறை மாவட்டம், மேலஒத்தசரகு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் ஆலயத்தில் 102 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கிருஷ்ணர், குழந்தை சந்தனாகிருஷ்ணராக மலர் தொட்டிலில் எழுந்தருளினார். மேலும், அவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மஹாதீபாராதனையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சந்தானகிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் படைக்கப்பட்டு தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சந்தானகிருஷ்ணனை வழிபாடு செய்தனர். மேலும், குழந்தைகள் வண்ண வண்ண உடைகளில் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து கோயிலுக்கு வருகை புரிந்து வழிபாடு செய்து பக்தர்களை கவர்ந்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இது போன்று, மயிலாடுதுறை புதுத்தெருவில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையில், கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகளுக்கு நெற்றியில் திலகமிட்டு மாலை அணிவித்து நோட்டு, பேனா வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, குடும்பம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும், குழந்தைகள் நன்றாக கல்வி கற்கவும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த பாடல்கள் பாடப்பட்டு தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் பொன்முடி