நாட்டையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று தமிழ்நாட்டில் பரவுவதைத் தடுக்க அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப் போக்கு மையங்களை வரும் 31ஆம் தேதி வரை மூடவேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகளவில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் வழக்கமாக நாளொன்றிற்கு ஐந்தாயிரம் பேர் வரை வருகை தரும் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா பேராலயம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு தற்போது மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பகுதிகளில் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது.
வெறிச்சோடி கிடக்கும் சுற்றுலாத் தளங்கள்! இதனால் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் ஆகிய வழிபாட்டுத் தளங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், அங்கு வருகின்ற பக்தர்களை மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்த பிறகே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மருத்துவக் குழுவில் சுகாதார துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு வருகை தரும் வாகனங்களுக்கு முழுவதுமாக பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் லாரி, கார், வேன் ஓட்டுநர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். பரிசோதனையில் கரோனா அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு ஆறு முறை நடைபெறும் திருப்பலிகள் மூன்று முறைகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனா எதிரொலி: அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை தீவிரம்