மயிலாடுதுறை:கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது. எனவே மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரி வெள்ள நீரானது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.
இதில் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் சென்று வரும் நிலையில், கொள்ளிடம் ஆற்றின் படுகை அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல் மற்றும் கோரை திட்டு ஆகிய நான்கு கிராமங்களில் உள்ள வீடுகளை வெள்ள நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக திட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் முழுவதும் வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் மேடான பகுதிக்கு வெளியேறி வந்தனர். இவ்வாறு வெளியேறிய மக்களுக்கு, கரைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
படகுகள் மூலம் பயணிக்கும் கிராம மக்கள் இதனிடையே இரண்டாவது நாளாக இன்றும் (அக் 19) வெள்ளப்பெருக்கு குறையாததால் திட்டு கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இதனால் தாழ்வான பகுதி மக்கள் முகாம்களுக்கு திரும்பி உள்ள நிலையில், மேடான பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி அன்றாடப் பணிகளுக்கு படகுகள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மேடான பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் படகுகள் மூலம் பள்ளிக்குச் சென்றனர்.
இதையும் படிங்க:முதலமைச்சர் ஆட்சியில் மழையோ மழை... எங்கு பார்த்தாலும் வெள்ளம்... துரைமுருகன்