மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், சுற்றுவட்டார கிராமங்களுக்கு மணல்மேடு முடிகண்டநல்லூர் கிராமத்திலிருந்து கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக முடிகண்டநல்லூரிலிருந்து குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
வில்லியநல்லூர் அருகே பாலாக்குடி கிராமத்தில் இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களாக 24 மணி நேரமும் குடிநீர் பீறிட்டு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குழாய் உடைப்பின் காரணமாக வெளியேறும் நீர் வாய்க்காலில் சென்று கலந்து வீணாகிறது. மேலும், பல மாதங்களாக குடிநீர் வெளியேறுவதால் அப்பகுதியில் சாலையில் சுமார் ஒன்றரை அடி தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கிறது.
கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் இடர் உள்ள நிலையில், பல மாதங்களாகத் தண்ணீர் வெளியேறி வாய்க்காலில் பாய்வதைக் கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
வழிந்து வீணாகும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் எனவே, பாலாக்குடி வாய்க்காலில் குடிநீர் கலந்து வீணாவதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர். தண்ணீர் தொடர்ந்து வெளியேறிவருவதை அப்பகுதி மக்கள் காணொலியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.