நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், பெரியாரியல் பயிலரங்கம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, "தனிமனிதர்கள் மீதான தாக்குதல் மதத்தின் பெயரால் நடத்தக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேசத்தந்தை காந்தியை கொலை செய்த கோட்சேவை புகழ்ந்து தமிழ்நாட்டின் கோட்சே ஹெச்.ராஜா என்று போஸ்டர் ஒட்டப்படுகிறது. எது தேச துரோகம் என்று தெரியாத நிலை உள்ளது.
கீழடியில் கிடைத்துள்ள அகழ்வாராய்ச்சியின் மூலம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நகர நாகரீகம் வெளியே தெரிந்துள்ளது. இந்த அகழாய்வைத் தொடர்ந்து நடத்துவதற்கு மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, தமிழ்நாடு தொல்லியல்துறை மூலம், கீழடி ஆய்வைத் தொடர்ந்து நடத்தி அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.