மயிலாடுதுறை: சீர்காழி பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மமக தலைவர் ஜவாஹிருல்லா நேரில் பார்வையிட்டார். சீர்காழி தாடாளன் பெரியபள்ளிவாசல் தெருவில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக பார்வையிட்டு, அரசுக்கு நிதிச்சுமை இருந்தாலும் கூட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் தொகை வழங்கியதற்கு மமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது. விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். தற்போது பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயிர்க்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமுமுக சார்பில் டிச.6-ம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களில், வழிபாட்டு உரிமை நிலைநாட்டப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. 1991-ம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் என்னென்ன வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ... அப்படியே தொடர வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது. ஆனால், அந்த சட்டத்தை மதிக்காமல் ஏராளமான சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் குறி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அந்தச் சட்டம் அப்படியே பின்பற்றப்பட வேண்டும். அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமைகளும், தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'காசியில் மத்திய அரசால் நடத்தப்படக்கூடிய தமிழ்ச் சங்கமம் விழா தமிழர்களை ஏமாற்றக்கூடிய விழாவாகும். இவ்விழாவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தமிழறிஞர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. திருக்குறள் 12 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இதை மொழி பெயர்த்த அறிஞர்களும் கூட இந்த விழாவில் கவுரவிக்கப்படவில்லை.
அந்த விழாவில் தமிழக கைவினைஞர்கள் கைவினைப்பொருட்கள் கண்காட்சி அரங்கு அமைத்துள்ளனர். அதனை பிரதமர் சென்று பார்க்கவில்லை. அவர்கள் பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கோவையில் நடத்திய செம்மொழி மாநாட்டில் ஏராளமான தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அது தமிழின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக இருந்தது. அது போன்ற எந்த நிகழ்வும் இங்கு நடைபெறவில்லை.
சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்த மமக தலைவர் ஜவாஹிருல்லா... காசியில் தமிழகத்தின் பல்வேறு மடங்களைச் சேர்ந்த இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீண்ட காலமாக உத்தரப்பிரதேசத்தில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காசி பல்கலைக்கழக மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அவ்விழாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தமிழுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் தமிழுக்கும் அவமானம் ஏற்படும் வகையில்தான் அவ்விழா நடைபெறுகிறது' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் விடியலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் - ஓ.பி.எஸ். கண்டனம்