மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளி ஜவகர் நவோதயா வித்யாலயா. இது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது. இது கிராமப்புற மாணவர்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளியாகும். இங்கு பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு விதமான கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதன் ஒரு முறையாக, மாணவர்கள் பல்வேறுக் கலாசாரங்களை அனுபவப்பூர்வமாக கற்கும் வகையில் "பள்ளி பரிமாற்ற முறை உள்ளது". இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள வேறு ஒரு நவோதயா பள்ளிக்கு ஒரு வருட காலம் அனுப்பப்படுகிறார்கள்.
தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்விக்கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள ராயன்பாளையத்தில் செயல்பட்டுவரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில், காரைக்கால் மாவட்டத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் 17 மாணவ, மாணவிகள் பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இதுபோல், மத்தியப் பிரதேச பள்ளியிலிருந்து காரைக்காலில் மாணவர்கள் பயின்று வந்தனர். இந்தச் சூழலில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காரைக்காலில் செயல்பட்டுவரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மூடபட்டு அங்கு பயின்ற மாணவ மாணவிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.