தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாகப்பட்டினத்தில் இன்று தொடங்கின. இப்போட்டியினை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கிவைத்தார்.
நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் இப்போட்டிக்கு ஒருசில கபடி அணிகளுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பிய மாவட்ட கபடி கழக செயலர் அன்பழகன், நாகை மாவட்டத்திலுள்ள ஒன்பது கபடி அணிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாகையில் நடைபெறுவதை அறிந்த நாகை, நாகூர், கல்லார், செருதூர், வேளாங்கண்ணியைச் சேர்ந்த அந்த ஒன்பது கபடி அணிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இன்று கபடி போட்டியில் கலந்துகொள்ள தங்களின் அணியின் பெயரை பதிவு செய்ய வந்தனர்.
அப்போது அந்த அணிகளை பதிவு செய்ய முடியாது என மாவட்ட கபடி கழக செயலர் அன்பழகன் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கபடி வீரர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அலுவலர்களுடன் கபடி வீரர்கள் வாக்குவாதம் தொடர்ந்து அங்கு வந்த நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா இங்கிருந்து கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்ததுடன், கபடி விளையாட்டை நாகையில் நடத்தக்கூடாது என அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளதாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
இதனால் மேலும் கோபமடைந்த கபடி வீரர்கள், பாரம்பரிய விளையாட்டை தடுத்து நிறுத்துவதற்கு நீங்கள் யார்? என அவரை முற்றுகையிட்டு அவரிடம் சரமாரியாக கேள்வியெழுப்பினர். இதனால் கபடி வீரர்களுக்கும், மாவட்ட விளையாட்டு அலுவலர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
பின்னர் அங்கு வந்த நாகூர் காவல் துறையினர், கபடி அணி வீரர்களிடம் சிக்கிக்கொண்ட மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட கபடி கழக செயலர் அன்பழகன் ஆகியோரை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
கபடி வீரர்கள் குற்றச்சாட்டு மாவட்ட விளையாட்டு அலுவலரின் பொறுப்பற்ற பேச்சால் அதிர்ச்சியடைந்த நாகை மாவட்ட கபடி அணி வீரர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் கபடி வீரர்களிடையே பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் கபடி விளையாட்டை நம்பியுள்ள தங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா மற்றும் மாவட்ட கபடி கழக செயலர் அன்பழகன் ஆகியோர் மீது மாநில விளையாட்டு ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 8 நிமிட காட்சியால் சிக்கல்: சென்சாரில் மாட்டிக்கொண்ட ஃபகத் பாசில் - நஸ்ரியா படம்