தமிழ்நாடு

tamil nadu

நதிநீர் இணைப்பு திட்டத்தால் ஆறுகளில் கானல் நீர் மட்டுமே வரும்- பேராசிரியர் ஜெயராமன்

By

Published : Apr 10, 2019, 7:51 PM IST

Updated : Apr 10, 2019, 8:04 PM IST

நாகப்பட்டினம்: நதிநீர் இணைப்பு திட்டத்தினால் ஆறுகளில் வரப்போவது கானல் நீர் மட்டுமே என்று கூறியுள்ள மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், இதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

பேராசிரியர் ஜெயராமன்

மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

"நாட்டின் தண்ணீர் பிரச்னை இன்றைக்கு தேர்தல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் எனவும், அதற்கென ஒரு ஆணையத்தை அமைப்போம் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். இதேபோல் கோதாவரி, காவிரி ஆறுகளை இணைக்கப் போவதாக அதிமுக கூறியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளுமே நதிகள் இணைப்பை தங்களது திட்டங்களைப் போல அறிவித்துள்ளனர். ஆனால் இவை பன்னாட்டு முதலாளிகளின் திட்டங்கள்.

வடக்கே 14 ஆறுகள், தெற்கே 16 ஆறுகள், இணைப்பு கால்வாய்கள் 37. இவற்றை இணைப்பதற்கு மூன்று ஆயிரம் அணைகள் கட்டி விளை நிலங்களை பிடுங்கி உள்ளனர். இந்தியாவில் உள்ள ஆறுகளை மிகப்பெரிய செலவில் இணைத்து, அந்த ஆற்று நீரை கட்டணத்துக்கு விற்பதுதான் பன்னாட்டு முதலாளிகளின் குறிக்கோள். இதுவரை இயற்கை அளித்த கொடையாக விளங்கிய நீர் அனைத்து உயிரினங்களின் பயன்பாட்டுக்கு இருந்து வந்தது. தற்போது ஆறுகளின் இணைப்பு என்ற பெயரில் மக்களிடம் இருந்து பிடுங்கி கார்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்க படவுள்ளது.

நதிகள் இணைப்புக்குப் பிறகு அவை அந்தந்த மாநிலங்களுக்கு சொந்தமானவை அல்ல. ஒரே நாடு, ஒரே மொழி என்று முழக்கமிடும் பாஜக நதிகள் அத்தனையும் இணைத்து இந்தியாவின் மொத்த விவசாயத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கிறது. நதிநீர் இணைப்பு என்பது மிக மிக அபாயகரமானது. நதிநீர் இணைப்புக்கு ஆற்றுநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும் போது இன்றைக்கு நதிநீர் இணைப்பை ஆதரிக்கும் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று தண்ணீர் வாங்கி தருவதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டி 67 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான இறுதி வரைவு அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அந்த அணையை கட்ட தமிழகத்தின் ஒப்புதலும் தேவை. எனவே அவர்கள் தமிழகத்தின் ஒப்புதலை கேட்கின்றனர். இந்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கோதாவரி, காவிரி நதிகள் இணைக்கப்படும், இதிலிருந்து 125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்கிறார். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இது கானல் நீர். தமிழ் இனத்தின் உரிமைகளையும், காவிரி ஆற்றின் உரிமையையும் காப்பாற்ற வேண்டும். இல்லாத ஒன்றை நினைத்து ஏமாந்து விடக்கூடாது" எனக் கூறினார்.

Last Updated : Apr 10, 2019, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details