கோவில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்- இரா.முத்தரசன் பேட்டி மயிலாடுதுறையில்வழிபாட்டு தலங்கள், தர்மஸ்தாபனங்கள், மடம் மற்றும் சத்திரம் நிலங்களில் குத்தகை சாகுபடியாளர்கள், குடியிருப்போர் நில உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது,”மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிகாலத்தில் இருந்தது போன்றே பகுதி முறையை மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவர வேண்டும். கோவில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
மடங்கள், தர்மஸ்தாபனங்கள், கோவில் போன்றவற்றின் நிலங்களில் பரம்பரை பரம்பரையாக குத்தகை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் குத்தகை செலுத்தவில்லை என்றால் நேரடியாக அறநிலையத்துறைக்கு அதிகாரம் வழங்கி நீதிமன்றம் போல அறநிலையத்துறை வழக்குகளை நடத்தி குத்தகை விவசாயிகளை வெளியேற்றக்கூடிய அபாயகரமான நிலை தற்போது தமிழ்நாட்டில் உள்ளது.
இம்முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும். இயற்கை சீற்றம் ஏற்படும்போது விவசாயம் பாதித்தவர்கள் குத்தகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அவற்றை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோவில் நிலங்களில் குடியிருப்போர், குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க:"இந்திய அணி ஹாக்கி உலகக்கோப்பை வென்றால் தலா ரூ.1 கோடி பரிசு" - ஒடிஷா CM!