மயிலாடுதுறை: மதனத்தில் இயங்கிவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து கடன் பெற்றவர்கள் விவரம், இயற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் உள்ளிட்டவற்றை வழங்கக்கோரி அதே ஊரைச் சேர்ந்த ஜீவா என்பவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.
ஜீவா கோரிய தகவல்களை வழங்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான இணை பதிவாளர் மற்றும் மாநில தகவல் ஆணையம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மயிலாடுதுறை மாவட்ட மதனம் முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரான கே.லெனின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், கூட்டுறவு கடன் சங்கம் ஒரு தன்னாட்சி அமைப்பு எனவும், இதன் கணக்குகள் உள்பட அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவால் நிர்வகிக்கப்படுவதாகவும், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்கள் அனைத்தும் உறுப்பினர்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்கள் அவற்றை அளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தகவலறியும் உரிமை சட்டத்தின் படி தகவல்களை அளிக்க உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மனு குறித்து மாநில தகவல் ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தகவல் கேட்ட ஜீவா உள்ளிட்டோர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க:ரூ.30.13 லட்சம் தங்கம், எலக்ட்ரானிக் பொருள்கள் கடத்தல் - விமான பயணி கைது