காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - சுருக்கு மடி வலை
நாகப்பட்டினம்: கொலை மிரட்டல் விடுத்த காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று( ஜூலை 10) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (ஜூலை 8) கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில், பெரிய விசைப்படகில் சுருக்குமடி வலையுடன் வந்த காரைக்கால் பகுதி மீனவர்கள், தரங்கம்பாடி மீனவர்கள் விரித்த வலையின் அருகிலேயே சுருக்குமடி வலையை வீசி மீன் பிடித்தனர்.
இதை தட்டிக்கேட்ட தரங்கம்பாடி மீனவர்கள் 7 பேரை காரைக்கால் மீனவர்கள் தாக்கி படகு, இன்ஜினை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை கோட்ட மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, கொடியம்பாளையம், பழையாறு, சின்னகொட்டாய்மேடு, கீழ மூவர்கரை உள்ளிட்ட 20 மீனவக் கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். தொடர்ந்து அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, அதிகவேக இன்ஜின் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மீன்பிடிப்பதை தடை செய்ய வலியுறுத்தி இன்று ( ஜூலை 10) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் மறியல் செய்து, தரங்கம்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் காரைக்கால் மாவட்ட மீனவர்களிடம் மயிலாடுதுறை கோட்ட மீனவர்கள் மீன் வாங்கக்கூடாது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.