நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் ஈசானியத்தெருவை சேர்ந்தவர் பார்வதி (54). கடந்த 9ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சென்ற பார்வதிக்கு அங்குள்ள செவிலியர் இடுப்பில் ஊசி போட்டுள்ளார். மருந்து முழுவதையும் செலுத்திய பின்னர் ஊசியை வெளியே எடுக்கமுடியவில்லை.
இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சீர்காழி அரசு மருத்துவமனைக்குச் சென்ற பார்வதி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து போது, ஊசி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் வீட்டுக்கு வந்த பார்வதி வலியால் துடித்துள்ளார். மூன்று நாட்களுக்குப் பின்னர் பார்வதியின் வீட்டுக்கு அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், ஊசி உள்ளே இருப்பதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு வரவும் அறிவுறுத்தியுள்ளார்.
அங்கு சென்ற பார்வதிக்கு மருத்துவர்கள் மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, ஊசி உடலின் ஆழத்துக்குள் சென்று விட்டதாகவும், அதனை அகற்ற முடியாது என்றும் தகவல் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லுமாறும் தெரிவித்துள்ளனர்.