கேரளா மாநிலம், கொச்சின் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகு, கடந்த மே.16ஆம் தேதி டவ்-தே புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த தந்தை, மகன்கள் உள்ளிட்ட ஒன்பது மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர்.
இந்தச் சம்பவத்தால், நாகப்பட்டினம் மாவட்ட மீனவ கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில், மாயமான மீனவர்களின் குடும்பத்தினரைக் கண்டு ஆறுதல் தெரிவிப்பதற்காக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்திற்குச் சென்றார்.
அங்கு மாயமான ஒன்பது மீனவர்களின் குடும்பத்திற்கு திமுக சார்பில், ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்கினார். அப்போது அமைச்சரின் காலில் விழுந்த மீனவ பெண்கள், ”எப்படியாவது காப்பாத்துங்க ஐயா” என கதறியது காண்போரை கண்கலங்க வைத்தது.