மயிலாடுதுறை:இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு குறித்து 24ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘ஆங்கிலேய அலுவலர் மவுண்ட் பேட்டன் பிரபுவிடமிருந்து செங்கோலைப்பெற்றது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் தான். அதுவும் திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது’ எனக் கூறினார்.
மேலும், ‘1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதற்கான சட்ட ரீதியிலான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஆங்கில அலுவலர் மவுண்ட் பேட்டன், நேருவை அழைத்து, ''இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படிப் பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?'' என்று கேட்டார். நேரு சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரப்பூர்வ விழாவிற்கு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர். எனவே, ராஜாஜியிடம் கூறினார்.
உடனே ராஜாஜி, “கவலை வேண்டாம், தமிழ்நாட்டில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வார். அதைப்போல நாமும் ஒரு செங்கோலைத் தயாரிப்போம். அதை வெள்ளைக்காரர்களிடமிருந்து நமது குருமார்களில் ஒருவர் மூலம், பெற்றுக் கொள்வோம் என்றார். நேருவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நேரம் குறைவாக உள்ளது, உடனே செங்கோலுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசிநல்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 20ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக்கொண்டிருந்தார்.