மயிலாடுதுறை: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட சட்டநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயமான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டினார் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தின் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், இரண்டாவது தளத்தில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரர் கோலத்திலும், அதற்குமேல் உள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்றுவிதமாக சிவன் ஒரே ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்.
64 பைரவர்கள் தனிச் சன்னதியில் உள்ள இந்த ஆலயம் பைரவ ஸ்தோத்திரம் ஆகும். இந்த ஆலயத்தில் 1991ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி குடமுழுக்கிற்கான திருப்பணிகள் தொடங்கின. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26) இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.