நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் வீரசோழன் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் தண்ணீரைப் பகிர்ந்து அளிப்பதற்காக பொதுப்பணித் துறை சார்பில் ரூ. 5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், அரும்பாக்கம் பகுதியில் படுகை அணை, வாய்க்கால்களின் கரைகளை சிமெண்டு கட்டைகள் கொண்டு பாதுகாப்பு சுவர் அமைத்து பலப்படுத்துதல், தண்ணீர் வெளியேறும் மதகுகள் அமைத்தல், ஆகிய பணிகள் நடைபெற்றன.
உள்ளூர் ஒப்பந்தக்காரர்களுக்கு பணிகளை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு உள்ள நிலையில், சேலத்தைச் சார்ந்த அன்னமார் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனம் ஒப்பந்தப்பணிகளை எடுத்து அனைத்துப் பணிகளையும் அவசரகதியில் செய்து முடித்தது.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், வீரசோழனாற்றிற்கு வந்தது. ஆற்றின் தடுப்பணையிலிருந்து கிளை வாய்கால்களான சேந்தவராயன் வாய்க்கால், குறும்பகுடி வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்ட போதும், கட்டுமானம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கரை பாதுகாப்பு பக்கவாட்டு சுவர்கள், கட்டி முடிக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், தண்ணீரில் சரிந்து விழுந்தும், அணையின் பல இடங்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.
இதனால் பெரிய அளவில் தண்ணீர் வந்தாலோ, அல்லது மழை, வெள்ள காலங்களிலோ மதகு அணை முழுவதும் தண்ணீரில் அடித்துச்செல்லும் நிலை எழுந்துள்ளது. இது குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை அவசர, அவசரமாக பழுதுநீக்கும் முயற்சியில் ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள், அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கும் வரையில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தடுத்து நிறுத்தியதுடன், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரிடம், பணிகளை கண்காணிக்கவில்லை என்றும் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.