மயிலாடுதுறை: மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் சிந்தனைசெல்வன், சுதர்சனம், கலைவாணன், மாரிமுத்து, ஜவாஹிருல்லா கலந்துகொண்டனர்.
அனைத்துத்துறை அதிகாரிகளுடன் குழுவினர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், திட்டங்கள் முறையாக செயல்படுத்தாதற்கான காரணங்கள் குறித்தும் கேள்வி எழுப்பி அறிக்கை சமர்ப்பிக்க கோரி திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
இதுகுறித்து பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக ஆட்சியில் 10 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் பிரியா மென்பொருள் என்ற உள்ளாட்சி அமைப்புகளில் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்கான மென்பொருள் திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. 2011 - 2014ஆம் ஆண்டுகளில் ஆதிதிராவிடர்களுக்காக 299 பணிகள் 193 கோடியே 93 லட்சத்தில் திட்டம் தீட்டப்பட்டு ஐஆர்சியின் வழிமுறைகள் பின்பற்றாமல் கட்டுமானம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டு அரசு பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
7 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2011 - 2014ஆம் ஆண்டுகளில் வேளாண்மைத்துறை மூலம் திருக்கடையூரில் நெய்தல் நிலத்தில் கடல்சார்ந்த பூங்கா அமைப்பதற்கான மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்படாததால், அந்த திட்டமே கையைவிட்டு போனது’ என குற்றம்சாட்டினர்.