தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுவன் மரணம்? உறவினர்கள் சாலை மறியல்!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் 8 வயசு சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் 8 வயசு சிறுவன் உயிரிழந்தாக உறவினர்கள் போராட்டம்
மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் 8 வயசு சிறுவன் உயிரிழந்தாக உறவினர்கள் போராட்டம்

By

Published : Jan 4, 2023, 1:06 PM IST

மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் 8 வயசு சிறுவன் உயிரிழந்தாக உறவினர்கள் போராட்டம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் (8) மற்றும் ஶ்ரீநிதிஸ் (5) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 30ஆம் தேதி ஹரிஷ் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சிறுவன் விஷக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் மருத்துவரிடம் தெரிவித்ததாகவும், ஆனால், அரசு மருத்துவர்கள் போதைப்பொருள் சுவாசித்ததாலோ அல்லது சிறுவன் சாப்பிட்ட உணவு காரணமாகவோ பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என கூறி சாதாரண வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவனின் உடலில் முன்னேற்றம் ஏற்படாததால் மறுநாள் 31ஆம் தேதி அன்று காலை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அவருக்கு பாம்பு கடித்து விஷம் உடல் முழுவதும் பரவி உள்ளதாக கூறி மருத்துவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 5 மணியளவில் சிறுவன் ஹரிஷ் இறந்துள்ளார்.

இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி மூலம் நேற்று மாலை மயிலாடுதுறைக்கு உடலை கொண்டு வந்தனர். இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு அமரர் ஊர்தியை நிறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட துணை கண்காணிப்பாளர் வசந்த்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறி 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து இரவு 9.30 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர்களிடம், மாவட்ட ஆட்சியர், சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும், அவர்களின் குடும்ப பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ரூ.2 லட்சம் மாவட்ட ஆட்சியர் விருப்பநிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க: கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்!

ABOUT THE AUTHOR

...view details