மயிலாடுதுறை: காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காயும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி மேற்கொண்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். மேலும் அறுவடை செய்த நெல்லை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி விரிவாக விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி ஏப்ரல் மாதத்தில் விதைவிட்டு நடவுசெய்த பயிர்கள் வளர்ந்து தற்போது விவசாயிகள் அறுவடையை தொடங்கியுள்ளனர்.
ஆனால் மாவட்டத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்பதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.
கூலி ஆட்கள் பற்றாக்குறையால் நாற்றுவிட்டு நடவு செய்யும் முறைகளை குறைத்து, நேரடி நெல் விதைப்பு முறை, இயந்திர நடவு என்று நவீன முறைகளை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர். அதேபோல் அறுவடைக்கும் ஆட்கள் கிடைக்காததால் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு இயந்திரம் மூலம் பல ஏக்கர் நிலம் அறுவடை செய்யப்படுவதால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில வாரங்களிலேயே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் அறுவடை செய்து முடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் ‘காரீப் பருவம்’ அக்டோர் மாதம் என்று கணக்கிட்டு கொண்டு ஒரு மாதம் முன்னதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவு திறக்கப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் 119 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார். ஆனால் மயிலாடுதுறை, செம்பனார் கோயில், குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் வட்டாரங்களில் இயந்திரம் மூலம் 30 சதவிகிதத்திற்கு மேல் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் முடிந்துவிட்டது.