கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், அரசு டாஸ்மாக் கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் அருகே கிடங்கல் கிராமத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் நாகை மதுவிலக்கு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது சுடுகாடு அருகே மதுவிற்பனை நடைபெறுவதை அறிந்துகொண்ட காவல் துறையினர், மதுவாங்குவதுபோல் சென்றனர்.
அங்கு அட்டைப்பெட்டியில் மறைத்து வைத்து மதுவிற்பனை செய்த மடப்புரத்தைச் சேர்ந்த ஈஸ்டர்ராஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மீதமுள்ள மதுப்பாட்டில்கள் எங்குள்ளது என்று காவல் துறையினர், கேட்டதற்கு அவர் பதில் கூறவில்லை. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களில் மண் ஒட்டியிருந்ததைக் கண்ட காவலர்கள் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அந்தச் சோதனையில், மதுவிற்ற இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியை தோண்டிய காவல் துறையினர் அங்கிருந்து 220 மதுபாட்டில்களை கைப்பற்றினர். இதையடுத்து அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
நிலத்தை தோண்டி மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் விசாரணையில், ஆக்கூரில் டாஸ்மாக் கடையில் பார் நடத்திவரும் குருமூர்த்தி என்பவர் மதுப்பாட்டிகளை விற்பனை செய்யக் கூறியதாக அவர் தெரிவித்தார். இதனடிப்படையில் குருமூர்த்தியை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில்மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்