நாகப்பட்டினம்: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
நாகை மாவட்டத்தில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மூன்று மாத காலமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த மீனவர்கள், சில நாட்களுக்கு முன்பிலிருந்து மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இச்சூழலில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகள், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடித்து வரும் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மீன்வளத்துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து, அந்த மீன்களை கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் ஏற்றுமதி செய்ய இருப்பதாக மீன்வளத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சோதனைச் சாவடிகளில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு, மீன்வளத்துறை அலுவலர்கள் அவ்வழியே மீன் ஏற்றிச்சென்ற வாகனங்களை மறித்து சோதனை செய்தனர்.