மயிலாடுதுறைமாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம்.
அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்து மார்க்கண்டேயனுக்கு என்றும் சிரஞ்சீவி என்று வரம் பெற்ற தலம்.
மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம்.