மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கேனீக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் - மோகனசுந்தரி தம்பதி. இவர்களது மகள் பா. தாரா அக்ஷரா (7). இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தனது மூன்றரை வயதிலிருந்து யோகாசனத்தை ஆர்வமுடன் கற்று வரும் மாணவி தாரா அகூரா, யோகா கலையின் கடினமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்யும் வல்லமை மிக்கவராக திகழ்ந்து வருகிறார்.
உடலை வில்லை போன்று வளைத்தும் பந்தை போன்று சுழற்றியும் பல்வேறு ஆசனங்களை செய்யும் மாணவி டிம்பா ஆசனம், விருச்சிக பத்மாசனம், கண்ட பேருண்ட ஆசனா, வீரஹனுமாசனம், துருவாசனா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு ஆசனங்களை செய்து மாநில தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், இம்மாணவி விருச்சிகாசனத்தில் கால்களை பயன்படுத்தி கோப்பைகளில் அதிவேகமாக முட்டைகளை வைத்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். தேள் வடிவில் உடலை வளைத்து விருச்சிகாசனத்தில் ஆறு கண்ணாடி கோப்பைகளில் ஆறு முட்டைகளை எடுத்து வைத்து 7.88 வினாடிகளில் புதிய கின்னஸ் சாதனையை படைத்தார்.