மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி, மாநில இளைஞரணிச்செயலாளர் கோமல் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், ‘அடிப்படை உறுப்பினர்களால் மட்டும்தான் அதிமுகவின் பொதுசெயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும். இதை யாரும் மாற்ற முடியாது என்பதை எம்ஜிஆர் கட்சி சட்ட திட்டத்திலும், உயிலிலும் கூட எழுதி உறுதிப்படுத்தியுள்ளார். சிலரை வசியப்படுத்தி என்னையும், சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள்.
இலங்கை ராஜபக்சே நிலைதான் எடப்பாடிக்கும்:பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதைப் பார்க்க எனக்கே பாவமாகத்தான் இருந்தது. நாளை இதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும். இலங்கையில் இனவெறியைத் தூண்டி ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும். துரோகிகள் கூட்டத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.