மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (27). கூலித் தொழிலாளியான இவருக்கும், திருவிழந்தூரைச் சேர்ந்த பிரியா (25) என்பவருக்கும், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவீந்திரன் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே நேற்று (ஆகஸ்ட்.26) வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்துவைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ரவீந்திரன் வீட்டில் மயங்கி கிடப்பதாக பிரியா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரவீந்திரனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். ரவீந்திரனின் கழுத்தில் லேசான காயம் இருந்ததால் தகராறில் அவரது மனைவி தாக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.