நாகை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் வேளாங்கண்ணி. வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கட்டிடக் கலை சுற்றுலாப் பயணிகளை பிரமித்து பார்க்க வைக்கிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், மும்பை, கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் கூட்டம் கூட்டமாய் வரத் தொடங்கியுள்ளனர். வேளாங்கண்ணி அருகே சாலை நெடுகிலும் அமைந்துள்ள கடைகளில் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
கோடைக் காலம் தொடங்கி விட்டதால் வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடல் அலைகளில் குட்டி, சுட்டிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றனர்.
மேலும், வேளாங்கண்ணி மாதாவை அலங்கரிக்கும் அந்த அழகு கடல் அலைகளில் குளித்து, கும்மாளமிட்டும் வருகின்றனர். இதில் சுட்டிக் குழந்தைகள் கோடைவிடுமுறையை குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர். வெயில் வாட்டி வதைத்த போதும் வெது, வெதுப்பான கடல் நீரில் தத்தி தாவி சிறு, சிறு அலைகளின் நடுவே அனைவரும் உற்சாக குளியல் போடும் காட்சி பார்ப்பவரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இதுமட்டுமல்ல, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்படும் இரால், நண்டு உள்ளிட்ட மீன்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்த விலைக்கு வேளாங்கண்ணியில் விற்கப்படுகின்றன. அதனை ஒரு கை பார்க்கும் விதமாக சுற்றுலா பயணிகள் மீன்களை ருசித்து, ரசித்து சாப்பிட்டு மகிழ்கின்றனர். வேளாங்கண்ணி பழைய மாதா கோவில், பார்க், பீச் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுவதால், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் தங்கி ஒய்வெடுக்க ஏதுவாக வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான விடுதிகளும் தனியார் தங்கும் விடுதிகளும் அங்கு நிறைவாக உள்ளன.