மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் என்பது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் பம்புசெட் நீரைக் கொண்டு அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும், இங்கு மட்டும் 1 லட்சத்து 84 ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தாலும், சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்காததாலும் பம்புசெட் நீரைக் கொண்டு விவசாயிகள் சாகுபடி பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை அருகே பொன்னூர் கிராமத்தில் அகோரம் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 25 ஏக்கரில் உமா ரகம் சம்பா பயிரை நடவு செய்து ஒரு மாதம் ஆன நிலையில், பயிர்கள் வளராமல் தரையோடு தரையாக கருகி உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்து பயிர்களை காப்பாற்ற முயற்சி செய்தும் பயனில்லை.
காவிரி ஆற்றில் தண்ணீர் வராத நிலையில், மழையும் பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் உப்புக் கரைசலாக மாறியதன் விளைவாக நெற்பயிர்கள் கருகியது. மேலும் பொன்னூர், பாண்டூர், கட்டளைச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் 250 ஏக்கருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று பயிர் பாதிப்பு குறித்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியியல் துறை பேராசிரியர் டாக்டர் ராஜப்பன், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், இணை இயக்குனர் சேகர், மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் மணிகண்டன், உழவியல் துறை இணைப் பேராசிரியர் நாகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பொன்னூர் கிராமத்தில் பயிர்கள் காய்ந்து சேதமடைந்த வயல்களை ஆய்வு செய்து, மண் மற்றும் நீரை பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பாதிப்பு குறித்து பேசிய நோயியியல் துறை பேராசிரியர் ராஜப்பன் கூறுகையில், “ஆழ்துளைக் கிணறு போர்வெல் நீர் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை பொய்த்ததாலும், காவிரி நீர் கிடைக்காததாலும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டகளில் நிலத்தில் மணிசத்து (பாஸ்பரஸ்) அதிகமாக இருப்பதால் பச்சை பாசியின் வளர்ச்சி அதிகரித்து, பயிர்களின் வேர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன், சூரிய ஒளி கிடைக்காமல் காய்ந்து வருகிறது.
மணிசத்து அதிகம் உள்ள பகுதிகளில் விவசாயிகள் டிஏபி உரத்தை பயன்படுத்துவதால், அந்த மணிசத்தும் பச்சைபாசியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களை இந்த பச்சைபாசிகள் இழுத்துக் கொள்வதால் பயிர்கள் சேதமடைகிறது. நிலத்தில் உப்புத்தன்மை உள்ள வயல்களில் விவசாயிகள் டிஏபி உரம் பயன்படுத்துவதை தவிர்த்து யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களைப் பயன்படுத்தலாம்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள மண்ணில் மணிசத்து தேவையான அளவு உள்ளது. தற்போது அது கிட்டாத நிலை உள்ளது. மணிசத்து அதிகம் உள்ள வயல்களில் பாஸ்போ பாக்ட்ரீயர் நுண்ணுயிர் உரம் பவுடர் மற்றும் திரவ வடிவில் உள்ளது. பச்சைபாசி தென்படக் கூடிய வயல்களில் காப்பர் சல்பேட் (மயில் துத்தநாகம்) ஏக்கருக்கு 2 கிலோ வாங்கி 20 கிலோ ஆற்று மணலுடன் கலந்து தூவிவிட்டு தண்ணீர் தேக்காமல் இருந்தால், பச்சைபாசிகள் அகன்று பயிர்களுக்குத் தேவையான ஆக்சிஜன், சூரிய ஒளி ஆகியவை கிடைக்கும்.
குறுவை, சம்பா சாகுபடிக்கு இடைப்பட்ட காலத்தில் பசுந்தாள் உரத்தை வளர்த்து, 45 நாள் முதல் 60 நாட்களில் வயலில் மடங்கி உழவு செய்தால் கனிமச் சத்தை அதிகரிக்கும். இதன் மூலம் நிலத்தில் உப்புத் தன்மை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும். டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்திய பகுதிகளில் இது போன்ற பிரச்னைகள் உள்ளது.
மணிசத்து என்று கூறக்கூடிய பாஸ்பரஸ் உப்புத் தன்மை அதிகமாவதால், நடவு செய்த பயிர்கள் பச்சை பிடிக்காமல் கருகி காய்ந்து சேதமடைகிறது. இதனை தவிர்ப்பதற்கு மேற்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றினால் நல்ல முறையில் சாகுபடி செய்ய முடியும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!