நாகப்பட்டினம்: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாளாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருமருகல், திருக்குவளை, தேவூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் 20 செ.மீ மழை பதிவானது.
இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே 12வது வார்டு பால்பண்ணைச்சேரி, புளியந்தோப்பு தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் குடியிருப்புகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேற்று காலை முதல் மழை விட்டிருந்தாலும், 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் தண்ணீர் வடியாமல் உள்ளது.
மழை நீர் வீடுகளைச் சுற்றியும் தேங்கியுள்ளதால், வீடுகளில் ஈரப்பதம் அதிகரித்து, வீட்டின் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அப்பகுதியில் மங்கலம், வசந்தி என்பவர்களது வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வீட்டுக்குள் குடியிருக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் பாம்பு, தேள் உள்ளிட்டவை வீட்டுக்குள் புகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் முழுமையாக தண்ணீர் வடியாத காரணத்தால், அப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதியல் போதிய வடிகால் வசதி இல்லாததால், ஒவ்வொரு மழைக்கும் தண்ணீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.