மயிலாடுதுறை: உணவகங்களில் காலாவதியான உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அசைவ உணவகங்களில் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் மயிலாடுதுறை நகராட்சிக்குத் தகவல் வந்துள்ளது.
இதையடுத்து நகராட்சி ஆணையர் பாலு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், நகர்நல அலுவலர் மலர்மன்னன் உள்பட சில அலுவலர்கள் இணைந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம், காந்திஜி சாலை, கூறைநாடு, ஸ்டேட் பேங் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தேநீர்க்கடைகள், குளிர்பான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
உணவகத்திற்குச் சீல்வைப்பு
பின்னர் அங்கு காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்களைப் பறிமுதல்செய்து அபராதம் விதித்தனர். இந்தச் சோதனையில் பல்வேறு உயர்தர அசைவ உணவகங்களில் சோதனை செய்தபோது காலாவதியான சிக்கன், மட்டன், மீன், இறால் போன்றவை குளிர்பதன பெட்டியில் இருப்புவைத்து சூடுபடுத்தப்பட்டு பரிமாறப்படுவது தெரியவந்தது.