தமிழ்நாடு

tamil nadu

தஞ்சை தேர் விபத்து நிவாரணம்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி!

By

Published : Apr 28, 2022, 6:42 PM IST

தஞ்சாவூர் தேர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து தமிழர் கட்சியின் தலைவர் ரவிக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்து தமிழர் கட்சி தலைவர்
இந்து தமிழர் கட்சி தலைவர்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மத்தளமடையான் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு இன்று (ஏப்.28) காலை இரண்டாவது கால யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, கடங்கள் புறப்பட்டு விமானத்தை அடைந்தன. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

களிமேடு தேர் விபத்து:இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ரவிக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'கடந்த இரு தினங்களுக்கு முன்பு களிமேடு கிராமத்தில் நடந்த விபத்து தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அனைவருக்கும் உரிய இழப்பீடும் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதீனங்களையும் அழைத்து 'தெய்வீக பேரவை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்ற கோரிக்கை ஏற்றதற்கும் தமிழ்நாடு கோயில்கள் மற்றும் திருமடங்களைப் பாதுகாக்க அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்து தமிழர் கட்சி தலைவர் பேட்டி

ஆதீனங்களுக்கு கறுப்புக் கொடி கூடாது:ஆதீனங்களுக்கு வருபவர்கள் மீது அரசியல் ரீதியாக கறுப்புக்கொடி காட்டும் சட்ட விரோத சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதீன கர்த்தர்களைப் பக்தர்களாகிய நாங்கள் தூக்கிக் கொண்டாடும் பட்டினிப்பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை எதிர்த்துப் போராடும் திராவிடர் கழகம் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடவுளை மறுப்பது அவர்கள் கொள்கை கடவுளை ஏற்பது எங்களுடைய கொள்கை. மடாதிபதிகளை மிரட்டிப் பார்க்கும் இதுபோன்ற சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். சிதம்பரம் நடராஜ பெருமான் குறித்து அவதூறாகச் சித்தரித்து யூட்யூபில் வெளியிட்ட யூடியூபர்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் சேகர் பாபுக்கு நன்றி:பல்வேறு கோயில்களுக்குத் தொடர்ந்து குடமுழுக்கு விழா நடத்தி வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுக்கு, நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். அதேபோல், கோயில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ள நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து கோயில் நிலங்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் சாதிய பேச்சுக்குக் கண்டனம் ஏன் எழவில்லை: இசைஞானி இளையராஜா பாரத பிரதமர் குறித்த முன்னுரை எழுதியதற்குக் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதிய வன்மத்தோடு பேசியிருக்கிறார்.

இதற்காக எந்தக் கட்சிகளும் இதுவரை கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஏன்? அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உரிய நிதியை விரைவாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு மத்திய அரசோடு முரண்பாடு இல்லாமல் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும்' எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: தஞ்சை தேர் விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details