மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசாலை அமைக்க குழி தோண்டிய போது மண்ணில் புதைந்திருந்த 22 ஐம்பொன் சிலைகள் 462 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் மீட்கப்பட்டது. இவை அனைத்தும் இரண்டடுக்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் கோயில் சன்னதியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகளை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா இன்று ( ஏப்.23 ) நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சிலைகள் மீட்கப்பட்ட நந்தவனப் பகுதியை பார்வையிட்ட அவர் சிலைகளின் தன்மை குறித்து கோயில் நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா கூறியதாவது, “சீர்காழி நகர் முழுவதுமே சிலைகளை கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை பார்த்தேன். இது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான கோயில் வளாகத்திற்கு உள்ளேயே சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால் அந்த சிலைகளை இங்குள்ள கோயில் வளாகத்திலேயே அருங்காட்சியகம் அமைத்து பராமரிக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு வசதிகளை இங்கேயே ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலை பாதுகாப்பகத்தில் வைக்கப்படும் சிலைகளே அவ்வப்பொழுது மாறிவிடுவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பழமை வாய்ந்த சிலைகளை பாதுகாக்க திராவிட திருட்டு மாடல் அரசனை நம்புவதற்கு இப்பகுதி மக்கள் தயாராக இல்லை” என தெரிவித்தார்.