தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருத்திச் செடிகளை வேட்டையாடும் வெட்டுக்கிளிகள்: பதற்றத்தில் விவசாயிகள்

நாகப்பட்டினம்: தரங்கம்பாடி அருகே உள்ளூர் வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் சேதமடைந்த பருத்திச் செடிகளை, வேளாண்மைத்துறை இயக்குநர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

grasshopper
grasshopper

By

Published : Jun 11, 2020, 10:31 PM IST

கரோனாவுக்கு அடுத்தப்படியாக பேசு பொருளாக இருப்பது வெட்டுக்கிளிகள்தான். பாலைவன வெட்டுக்கிளி என்று அறியப்படும் இந்த சிற்றுயிர் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்க்கையிலும் விளையாடி விடுமோ என்ற அச்சம் உருவாகத் தொடங்கியிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படையெடுத்து ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளையெல்லாம் பதம் பார்த்த வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்குள் நுழைந்து உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து இன்னும் மீள முடியாத மக்களுக்கு வெட்டுக்கிளிகள் மற்றொரு பேரிடியாக இறங்கியுள்ளது. அந்தவகையில், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ளூர் வெட்டுக்கிளிகளின் அட்டகாசத்தால் பருத்திச் செடிகள் சேதமடைந்து வருவது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.

பருத்திச்செடிகளை மேயும் வெட்டுக்கிளிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் சுமார் ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருக்களாச்சேரி ஊராட்சியில் மட்டும் சுமார் 70 ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று (ஜூன் 10) திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர், 10 ஏக்கர் பரப்பளவில் வயலில் சாகுபடி செய்திருந்த, பருத்திச் செடிகளில் உள்ள இலைகள், பூக்கள், காய்களை நூற்றுக்கணக்கான வெட்டுகிளிகள் படையெடுத்து வந்து தின்று சேதப்படுத்தின.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சதீஷ் உடனடியாக வேளாண்மைத்துறைக்கு தகவலளித்தார். இதனையடுத்து, வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநர் (ஆராய்ச்சி) சுப்பையன் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய அலுவலர்கள், பூச்சியியல் நிபுணர்கள் ஆகியோர் இன்று (ஜூன் 11) நிகழ்விடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ.ராமலிங்கம்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநர் சுப்பையன், "பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளூர் வெட்டிக்கிளிகள்தான். இவை பாலைவன வெட்டிக்கிளிகளாக இருக்குமோ என விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. இவை பயிர்களுக்கு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தாது. வயல்களை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமாகவும், வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றியும், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் இவ்வெட்டிக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்" என்றார்.

வேளாண்மைத்துறை இயக்குநர் சுப்பையன்

முன்னதாக, நிகழ்விடத்துக்குச் சென்று பாதிப்புக்குள்ளான வயலில் பயிர்களை பார்வையிட்ட மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ.ராமலிங்கம், "பருத்திச் செடிகளை தாக்கிய வெட்டிக்கிளிகளை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:உள்ளூர் வெட்டுக்கிளிகள் தாக்குதலில் பருத்திச் செடிகள் சேதம்

ABOUT THE AUTHOR

...view details