தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி.. - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

ஆளுநருக்கு ஒரு வேலையும் கிடையாது என்றும், அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் நம்ம சொல்ற இடத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 22, 2023, 7:49 AM IST

அமைச்சர் உதயநிதி

மயிலாடுதுறை:திமுக சார்பில் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.

இதனையடுத்து நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பாக முகவர்கள் சிந்திய வியர்வை உழைப்புதான் திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது. தேர்தலில் வியர்வை சிந்தி உழைத்த நீங்கள், பாக முகவர்கள் அல்ல. அனைவரும் பாக முதலமைச்சர்கள். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மயிலாடுதுறையில் இன்றே தொடங்கிவிட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை பாஜக அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து நடத்தி வருகின்றனர். அது சாதனை விளக்க பொதுக் கூட்டம் அல்ல. அது ஒன்பது வருட வேதனை விளக்க பொதுக் கூட்டம். மோடி சொல்வது எல்லாம் வடைதான்.

புதிய வேளாண் சட்டம், 100 நாள் வேலை திட்டத்தை முடக்கியது, வேளாண் பொருள்கள் மீது ஜிஎஸ்டி வரி விதித்தது, கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு மக்களை அலைக் கழித்தது, மாணவர்களிடம் நீட் தேர்வை புகுத்தி மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைத்தது, 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று கூறி ஏமாற்றியது, இந்தியா முழுவதும் ரயில் விபத்துகளை தொடர்கதையாக வைத்திருப்பதுதான் பாஜகவின் சாதனையாக உள்ளன.

ஆளுநருக்கு ஒரு வேலையும் கிடையாது. அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப். நாம் சொல்கிற இடத்தில் கையெழுத்து போட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று சனாதனத்தை தூக்கி வைத்து பேசுபவராகவும், குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசுபவராகவும் உள்ளார்.

செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் நிறுவி தமிழ்நாடு மக்களின் வாக்குகளை கேட்கிறது, பாஜக அரசு. தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. செங்கோலை நிறுவி திராவிட மாடல் ஆட்சியை ஆரிய மாடல் ஆட்சியாக மாற்ற நினைக்கும் பாஜக முயற்சி பலிக்காது.

அதிமுக கட்சித் நிலைமை உங்களுக்கே தெரியும். எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தீபா டிரைவர் அணி, தீபா புருஷன் அணி என்று அதிமுக பிரிந்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என இன்று அதிமுகவினர் போராட்டம் செய்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுக்காக கைது செய்ய வேண்டுமென்று கூறும் அதிமுக ஆட்சியில், அப்போதைய அமைச்சர்கள் மீது பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி சோதனை நடத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாஜகவின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படி அடிமைகளை ஓட ஓட விரட்டினோமோ, அதே போன்று வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் திமுகவின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"சாதாரண கிளை செயலாளரைக் கூட தொட முடியாது" - மத்திய அரசுக்கு அமைச்சர் உதயநிதி சவால்!

ABOUT THE AUTHOR

...view details