மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் சீனிவாசன் (53). இவர் சீர்காழி அருகே நிம்மேலி - நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தொற்று கரணமாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்படாமல் உள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. கிராமப்புற மாணவர்களுக்கு அரசின் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகப் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
எல்இடி டிவி அமைத்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர் சக்கர நாற்காலியில் 32 இன்ச் எல்இடி டிவி
இருந்த போதிலும் இன்னும் பல வீடுகளில் வறுமையின் காரணமாக தொலைக்காட்சி பெட்டி இல்லாமல் உள்ளன. மேலும் பெற்றோர்கள் தினக் கூலி வேலைக்குச் செல்வதால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவருகிறது.
இதனைக் கருத்தில்கொண்ட ஆசிரியர் சீனிவாசன் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி பாதிக்காத வகையில், தனது சொந்த செலவில், நடமாடும் சக்கர நாற்காலியில் 32 இன்ச் எல்இடி டிவி பொருத்தி மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் கற்பித்துவருகிறார்.
இதற்காக சீனிவாசன் 32 இன்ச் எல்இடி டிவி, ஸ்பீக்கர், இணைய வசதி மோடம், பென்டிரைவ் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வாங்கி, அதனைச் சக்கர நாற்காலியில் பொருத்தி, கிராமங்களுக்கு எடுத்துச் சென்று, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்துவருகிறார்.
தொலைக்காட்சி மூலம் பாடம்
இவர் நிம்மேலி நடுத்தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு என ஒவ்வொரு பகுதியிலும் எல்இடி பொருத்தப்பட்ட வீல் சேரை தள்ளிக் கொண்டு சென்று கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்துவருகிறார்.
மேலும் அதன்மூலம் எழும் சந்தேகங்களைத் தெளிவுப்படுத்தியும் வருகிறார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களையும் தந்துவிட்டுச் செல்கிறார்.
மாணவர்களைத் தகுந்த இடைவெளியுடன் அமரச்செய்து, முகக் கவசம் அணியவைத்து, ஒவ்வொரு பகுதியாக நாள்தோறும் சென்று இரண்டு மணிநேரம் மாணவர்களுக்கு கல்வியைக் கற்றுக்கொடுத்துவருகிறார். ஆசிரியரின் புதிய முயற்சிக்குப் பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: “சில கொள்கை முடிவுகளால்தான் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்” - ஓபிஎஸ்