2018ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில், நாகை மாவட்டம் வேதாரண்யம், வெள்ளப்பள்ளம், காமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டன. தங்களது உடைமைகளை இழந்து தவித்த மக்கள் பசியால் தவித்தனர். மின்சாரம் இல்லை, உடுத்த உடை இல்லை என அவர்களது வாழ்க்கையே இருண்ட காலமானது. யாரும் எதிர்பார்க்காத இந்த பாதிப்பு பலரையைும் சோகமடைய வைத்தது.
வீடில்லாமல் வாழ்றோம் ஐயா- கண்ணீர் விடும் மக்கள்
நாகை: கஜா புயலால் வீடுகளை இழந்து வாடிவரும் வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி, 282 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்தது. ஆனால், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு அரசு அறிவித்த பதினைந்தாயிரம் ரூபாய் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 282 குடும்பங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இதுவரை நிவாரணம் வழங்காததால் பழுதடைந்துள்ள குடிசைகளில் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.