ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழ்நாட்டில் மக்களவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளும் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர், ஓய்வு பெற்ற நீதிபதி குருவையா நாகையில் பரப்புரையில் ஈடுபட்டார். இதன் பின்னர் நமது ஈ டிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது,
"நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல கிராமங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பால் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரத்யேகப்பேட்டி அதேபோல், பழமை வாய்ந்த நாகை துறைமுகம், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது, அதனை நவீனப்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவந்து அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற தொகுதிகளைக் காட்டிலும், நாகப்பட்டினம் தொகுதி கல்வியில் பின்தங்கி தொகுதியாக இருப்பதால், அதனை போக்க சர்வதேச அளவிலான கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
புயல் நிவாரணம் என்பது முழுமையாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த நிவாரணம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உலக தரத்தில் மருத்துவ சிகிச்சை, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, இலங்கை உடனான தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணல் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம்.
இதற்கு முன்பு மக்களவைத்தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும், சரியாகவும் செய்யாத காரணத்தினால்தான், தொகுதியில் உள்ள குறைகள் இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் வித்தியாசமான முறையில் மக்களுடன் கலந்து பேசி, அவர்களுக்கான குறைகளை தீர்ப்போம். நிதி ஒதுக்கீட்டில் எந்த ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் தொகுதிக்கான செலவு செய்யப்படும். கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் பார்த்திராத ஒரு மக்களவை உறுப்பினர் போல் நாங்கள் செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், கட்சித்தலைவர் கமலின் பேச்சு அனைவருக்கும் புரிகிறது, கமலின் அளவிற்கு எந்த கட்சித்தலைவரும் பேசுவதில்லை. மற்ற கட்சி தலைவர்களின் பேச்சுகள் எதிர்க்கட்சியினரை கேலி, கிண்டல் செய்வதற்காக உள்ளதே தவிர மக்களைப் பற்றி கமல் மட்டுமே தெளிவாக பேசுவதாக கூறி முடித்தார்.